காங்கயம் தாராபுரம் சாலையில் செம்மங்காளிபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்து கிணற்றில் நேற்று ஆண் மயில் ஓன்று விழுந்துள்ளது. 60 அடி ஆழம் உள்ள கிணறு என்பதால் மயிலால் மேலே வர முடியாமல் தத்தளித்தது. மயிலின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றை பார்த்தனர். அப்போது நீண்ட தோகையுடன் இருந்த ஆண் மயில் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
இது பற்றி காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் மீட்கப்பட்ட ஆண் மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பத்திரமாக ஊதியூர் காப்பு காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.