மகாளய அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு..!

மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு நீர்நிலைகளில் மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். .

Update: 2023-10-14 03:45 GMT

ராமேஸ்வரம்,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். தஞ்சை, நாமக்கல், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குறிப்பாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

திருச்சி- ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர். தஞ்சை கும்பகோணம் மகாமக குளம், காவிரி படித்துறையில் அதிகாலை முதல் தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

அதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளக்கரையில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மேலும், மகாளய அமாவாசையையொட்டி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்