மகாகாளியம்மன் கோவில் வீதியுலா, நடைபாவாடை திருவிழா

கரக உற்சவத்தை முன்னிட்டு மகாகாளியம்மன் கோவில் வீதியுலா, நடைபாவாடை திருவிழா நடந்தது

Update: 2023-04-12 18:45 GMT

மயிலாடுதுறை நகரம் 2-வது புதுத்தெருவில் பழைமையும், பிரசித்தியும் பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் உள்ள கொத்தத்தெரு பெரிய மாரியம்மன், மகா காளியம்மனின் சகோதரியாக கருதப்படுவதால் 5-வது புதுத்தெரு வாசிகளால் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரு அம்பிகைகளுக்கும் அலங்கார சக்திகரகம் எடுத்து வீதியுலா நடத்தப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புதுத்தெரு மகாகாளியம்மன் கோவிலில் கரக உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இருஅம்பிகைகளுக்கான சக்தி கரகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடந்தது. பக்தர்கள் வீடுகள் தோறும் அம்மனை வரவேற்று தீபாராதனை செய்து வழிபாடு செய்தனர். வீதியுலா முடிவடைந்து இருஅம்பிகைகள் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியாக நடைபாவாடை திருவிழா நடந்தது. தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் போட்ட நடைபாவாடையில் அம்பிகைகள் மல்லாரி ராகங்களுக்கு ஏற்ப திருநடனம் புரிந்தவாறு கோவில் வந்தடைந்து கரகங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்