அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலையில் முதல்முறையாக அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை (சனிக்கிழமை) மாலை ஈசான்ய மைதானத்தில் தொடங்குகிறது.

Update: 2023-02-17 16:47 GMT


திருவண்ணாமலையில் முதல்முறையாக அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை (சனிக்கிழமை) மாலை ஈசான்ய மைதானத்தில் தொடங்குகிறது.

மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலையில் உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.

அதன்படி கோவிலில் நாளை (சனிக்கிழமை) அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும்.

மகா சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

முதல்முறையாக...

அதன்படி இந்த ஆண்டு முதல் முறையாக திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் ஈசான்ய மைதானத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாளை மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு ஓதுவார்கள் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பட்டிமன்றம்

7.30 மணிக்கு புதுவை சுரேஷ் குழுவினரின் கயிலாய வாத்திய நிகழ்ச்சியும், 8 மணிக்கு ஜெகத்லயா குழுவினர் மற்றும் சகானா அகாடமி குழுவினர், தில்லை ஸ்ரீசிவகாமி மாதங்கி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும்,

9 மணிக்கு கலைமாமணி துறையூர் முத்துக்குமார் குழுவினரின் சாமியாட்டமும், 9.25 மணிக்கு சிவனடியார்கள் பெரிதும் சிந்தை மகிழ்வது மக்கள் தொண்டிலா, மகேசன் தொண்டிலா என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 10.45 மணிக்கு செம்பருத்தி கலைக்குழு, பரமசிவம் குழுவினரின் நையாண்டி மேள நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு பினேஷ் மகாதேவன் குழுவினரின் நாட்டிய நாடகமும், அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் மின்னல் மூர்த்தி குழுவினர் வழங்கும் தப்பாட்டம் நிகழ்ச்சியும்,

2 மணிக்கு சக்தி குழுவினரின் நாத சங்கமம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ஏர்டெல் சூப்பர் சிங்கர் அபிலாஷ், அனிருத், ரேஷ்மா, ஷியாம், தன்யஸ்ரீ ஆகியோர் வழங்கும் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்