ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
வெடால் கிராமம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டு
வெடால் கிராமம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி தாலுகா தேசூரை அடுத்த வெடால் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பஞ்ச வர்ணம் பூசப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கோவிலுக்கு முன்பு பெரிய பந்தல் அமைத்து அதில் 108 கலசங்கள் வைத்து யாக குண்டம் அமைத்து லட்சுமி பூஜை, விநாயகர் பூஜை, தம்பதி பூஜைகோ பூஜை, 3 கால பூஜை நடந்தது. அதன்பின் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசத்துடன் பட்டாச்சாரியார்கள் கோவிலை மூன்று முறை வலம் வந்து கோவில் மீது விமானத்துக்கு எடுத்துச்சென்றனர். அங்கு கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி சூரியனுக்கும் கலசத்துக்கும் கற்பூர ஆராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர் அப்ேபாது பக்தர்கள் கோவிந்தா, நாராயணா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஆதிகேச பெருமாள் சாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வெடால் குண்ணகம் பூண்டிமகமாயி திருமணி, திருமால்பாடி, சீயமங்கலம், தேசூர், திரை கோவில், தெள்ளார், பாஞ்சரை, கூனம்பாடி, தேன் திண்ணலூர், சி.மபுதூர் ஆகிய கிராமங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நாதஸ்வர இசையுடன் ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பக்தர்கள் தெருக்களில் மா கோலம் இட்டு மா இலை தோரணம் கட்டி பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை வெடால் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.