போலீஸ் நிலையத்தில் விவசாயி மர்ம சாவு தொடர்பாக அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
போலீஸ் நிலையத்தில் விவசாயி மர்ம சாவு தொடர்பாக அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் நிலையத்தில் திடீர் சாவு
அரியலூர் மாவட்டம் ஓரியூரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்று இருந்தார். அப்போது பக்தர் ஒருவரிடம் செல்போன் திருட முயன்றதாக முருகானந்தத்தை, கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீஸ் நிலையத்தில் இருந்த சிறை அறையில் வைத்து இருந்தனர்.
அப்போது கழிவறைக்கு சென்ற அவர் கழிவறையின் ஜன்னல் கம்பியில் தனது இடுப்பில் கட்டி இருந்த அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல்முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்கள்.
உடலை வாங்க மறுப்பு
பின்னர் முருகானந்தத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் நேற்று காலை முருகானந்தத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் அங்கு வந்து பிரேத பரிசோதனை அரங்கில் வைக்கப்பட்டு இருந்த முருகானந்தத்தின் உடலை பார்வையிட்டு, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினரிடமும் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, முருகானந்தத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் அரைஞாண் கயிற்றால் ஒருவர் எப்படி தூக்குப்போட்டு இறக்க முடியும் என்றும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
இதையடுத்து அவரது குடும்பத்தினரிடம், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை 4.45 மணிக்கு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் ராம்கியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் பலர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இது போலீஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.