திருமங்கலம் அருகே மந்திரவாதி அடித்துக்கொலை

திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மந்திரவாதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2023-07-14 22:42 GMT

திருமங்கலம்,

சென்னை திருமங்கலம் அடுத்த பாடிக்குப்பம், காந்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சையத் சிக்கந்தர் (வயது 38). மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவர், மாந்திரீக தொழில் செய்து வந்தார். பொதுமக்கள் பலர் தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்காக இவரிடம் வந்து தாயத்து, கயிறு கட்டி சென்றனர்.

நேற்று முன்தினம் முழுவதும் சையத் சிக்கந்தர் வெளியே வராமல் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாலையில் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் தலையில் பலத்த காயத்துடன் சையத் சிக்கந்தர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நண்பரை கண்டித்தார்

இது குறித்து தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போலீசார், கொலையான சையத் சிக்கந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சையத் சிக்கந்தரின் நண்பர் விக்கி. இவர், அவ்வப்போது சையத் சிக்கந்தர் வீட்டில் தங்கி வந்தார். விக்கிக்கு சரித்திர பதிவேடு குற்றவாளியான புருஷோத்தமன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்துக்கும் அடிமையானதாக தெரிகிறது.

இதனை சையத் சிக்கந்தர் கண்டித்தார். புருசோத்தமனுடன் பழக வேண்டாம் என நண்பரிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி, புருசோத்தமன் இருவரும் சேர்ந்து மந்திரவாதி சையத் சிக்கந்தரை அடித்துக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கோர்ட்டில் சரண்

இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விக்கி மற்றும் புருஷோத்தமன் இருவரும் நேற்று காலை மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.

அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்த பிறகே மந்திரவாதி கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்