"தி.மு.க.வில் இருக்கும் மதுரைக்காரர்களும் கோபக்காரர்கள்தான்" - அமைச்சர் பெரியகருப்பன்
பா.ஜ.க.வில் இருக்கும் மதுரைக்காரர்கள் கோபக்காரர்கள் என்றால், தி.மு.க.விலும் மதுரைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.;
சிவகங்கை,
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த, மதுரை தும்மகுண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் சென்றார்.
அங்கு அவரது காரை வழிமறித்த பா.ஜ.க.வினர் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது காரை முற்றுகையிட முயன்றனர். திடீரென அவரது காரின் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நேற்று இரவு 11 மணியளவில் அமைச்சர் பி.டி.ஆர். வீட்டிற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, "பாரதிய ஜனதா கட்சி எப்போது அமைதியை விரும்பக்கூடிய கட்சி, கலவரத்தை விரும்பக்கூடிய கட்சி கிடையாது. அதேநேரத்தில் நேற்று பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் குறித்து அமைச்சர் பேசிய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை மக்கள் அவமதிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று நடைபெற்ற போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில்அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர்கள் கட்சியில் இருக்கும் மதுரைக்காரர்கள் கோபக்காரர்கள் என்றால், தி.மு.க.விலும் மதுரைக்காரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் அது பொருந்தும்" என்று தெரிவித்தார்.