மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று கதிர் அறுப்பு வைபவம் நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று கதிர் அறுப்பு வைபவம் நடந்தது.
தைத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தை தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும். நேற்று சிந்தாமணியில் கதிரறுப்பு வைபவமும் நடந்தன. இதற்காக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அங்கு எழுந்தருளினார்கள். சிந்தாமணி பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வயல்வெளியில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சார்பில் கோவில் சிவாச்சாரியார்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தனர். பின்னர் நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவமான இன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில், மீனாட்சி அம்மன் கோவில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.
அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்..
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செயயப்பட்டுள்ளது.