போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-08-24 20:03 GMT


மதுரையை சேர்ந்த ஜெயா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் முத்து கார்த்திக் (வயது 17). இவரை விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி போலீசார் அழைத்து சென்றனர். அவரை 13.1.2019 முதல் 16.1.2019 வரை போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்து, பொய் வழக்கில் கைது செய்தனர். அப்போது, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த எனது மகன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்போதைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்பட 3 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வரை 3 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், எனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால்தான் முத்து கார்த்திக் இறந்துள்ளார் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தவறு நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்தாலே இழப்பீடு வழங்கலாம். இதற்காக வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இதற்கு ஆதாரமாக பல உத்தரவுகள் உள்ளன என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "போலீஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால்தான் மனுதாரரின் மகன் இறந்துள்ளார். எனவே, இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இதில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை போக மீதமுள்ளதை வழங்க வேண்டும். இந்த பணத்தை யாரிடம் வசூலிப்பது என்பதை கீழ் கோர்ட்டில் நடந்து வரும் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவை பொறுத்து தீர்மானிக்கலாம்" என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்