கனிமவள விவகாரங்களில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கும் அதிகாரம்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கனிமவள விவகாரங்களில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கும் அதிகாரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-14 20:47 GMT


கனிமவள விவகாரங்களில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கும் அதிகாரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குவாரி விபத்து

நெல்லை பாளையங்கோட்டை அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல் குவாரியில் கடந்த ஆண்டு இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் சிலர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. அதன் உரிமையாளர்களும் கைதானார்கள்.

இந்தநிலையில் குவாரியை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி அதன் உரிமையாளரான குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், எங்கள் குவாரி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். நாங்கள் குவாரியை நடத்தவில்லை. குவாரியை குத்தகைக்கு விட்டிருந்தோம். இதனால் குவாரியை தொடர்ந்து நடத்தவும், வாகனங்களை விடுவிக்கவும், வங்கி கணக்கை செயல்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

3 நீதிபதிகளுக்கு பரிந்துரை

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சுரங்கம் மற்றும் கனிம வளச் சட்டப்படி வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருவாய்த் துறையினருக்குதான் உள்ளது. கோர்ட்டு உத்தரவுகளிலும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அரசாணையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக வருவாய்த்துறையினருடன், போலீசாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த பரிந்துரையை ஏற்று இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

போலீசாருக்கும் அதிகாரம்

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி, முரளி சங்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், கனிமவள சட்டப்படி அதிகாரம் பெற்ற அலுவலர் என்பது வருவாய் துறையினர் மட்டுமின்றி போலீசாருக்கும் பொருந்தும். எனவே கனிமவள சட்டப்படி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்யலாம். சுற்றுச்சூழல் நலன் கருதி கனிமவள சட்டத்தின் 36 (ஏ) பிரிவில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனிம வள வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு, காலதாமதமின்றி விரைவாக வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்