பழிக்குப்பழியாக நடந்த கொலை வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பழிக்குப்பழியாக நடந்த கொலை வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-04 21:10 GMT


நெல்லை மாவட்டம் மேலச்செவல் மற்றும் கீழச்செவல் பகுதியைச் சேர்ந்த இரு சமூக இளைஞர்களிடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன் என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் தலையைத் துண்டித்து மர்ம கும்பல் கொன்றது. இந்த கொலை சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் கைதான அய்யப்பன் என்பவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், தன் மீதான கொலை வழக்கை ரத்து செய்யக்கோரியும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது, கொலை செய்யப்பட்ட மாரியப்பனின் மனைவி சங்கிலிமுத்துவுக்காக இலவச சட்ட உதவி மையத்தின் வக்கீல் சுதாராணி ஆஜராகி, மனுதாரரின் மனு ஏற்புடையதல்ல என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இல்லை. சிலரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை சேர்த்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் அரசு வக்கீல் மாதவன் ஆஜராகி, பழிக்குப்பழி வாங்கும் வகையில் இருசமூகத்தினருக்கு இடையேயான முன்விரோதத்தில் கொலைகள் நடந்துள்ளன. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

விசாரணை முடிவில், வழக்கின் தீவிரத்தன்மையை கருதியும், பழிக்குப்பழியாக தொடர் கொலைகள் நடப்பதாலும் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்