கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-12 20:02 GMT


கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆசிரியருக்கு பணப்பலன்கள்

திருச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றியவர், தனக்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை, ஊதியம் மற்றும் பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரருக்கான பணப்பலன்கள், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படாததால் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி அந்த ஆசிரியர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பலமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அரசு தரப்பில் முறையாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இதனால் ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதிகாரிகளின் மந்தநிலை

இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய, நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை 4 வாரத்தில் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அது தொடர்பான நடவடிக்கையை கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் 12 முறைக்கும் மேலாக இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு பட்டியலிடப்பட்டும் எவ்விதமான அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மந்தநிலையில் செயல்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயலாளர், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இந்த உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என்பது தொடர்பாக தனித்தனியே விளக்க பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் எச்சரிக்கை

20 முறைக்கும் மேலாக வழக்கு பட்டியலிடப்பட்டும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர், இயக்குனர், திருச்சி மாவட்டத்தின் தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர்தான் காரணம் எனில் அவர்கள் மீதும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

மனுதாரருக்கு உரிய பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்