மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை சீரமைத்து திறப்பு -பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை சீரமைத்து திறக்கப்பட்டது. பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2022-10-26 20:58 GMT


மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை சீரமைத்து திறக்கப்பட்டது. பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சிலை சீரமைப்பு

மதுரை கோரிப்பாளையத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வெண்கலத்தால் சிலை அமைக்கப்பட்டது. தேவர் குருபூஜையொட்டி பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன் அரசியல் கட்சி தலைவர்கள் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சிலையை சீரமைத்து, பெயிண்ட் அடித்து அழகுபடுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முடிவு செய்தனர். அது குறித்து கட்சியின் மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் மதுரை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தார். மேலும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனிடம் இது குறித்து அவர் தெரிவித்தார். உடனே அவர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்து பேசுவதாக கூறினார். அதை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மதுரை மாநகராட்சி சார்பில் சிலை சீரமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையில் சிலையை இலவசமாக சீரமைக்க எம்.ஆர்.எப். பெயிண்ட் நிறுவனத்தினர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினரிடம் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து சிலையை சீரமைக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்தது. பின்னர் அந்த சிலைக்கு தங்கநிறத்திலான பெயிண்ட் அடிக்கப்பட்டு தேவர் ஜெயந்தி விழாவிற்கு தயாரானது.

மாலை அணிவித்து மரியாதை

அந்த சீரமைக்கப்பட்ட சிலைக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து பொதுமக்கள் பார்வைக்கு நேற்று காலை திறந்து வைத்தனர். பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மதுரை மேயர் இந்திராணி மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் நவமணி, சிவபாண்டி, வடிவேல், ஆசைகுமார், சிவா, ராஜேஷ், எம்.ஆர்.எப். நிறுவன மேலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கதிரவன் நிருபர்களிடம் கூறும் போது, தேவர் குருபூஜை விழா நாளை முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி மதுரையில் உள்ள தேவர் சிலையை சீரமைக்க அரசிடம் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் உடனே ஏற்றுக்கொண்டு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் சிலையை சீரமைத்து கொடுத்துள்ளார். அவருக்கு கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தேவர் குருபூஜைஅன்று மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்