மதுரை - டெல்லி சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
மதுரை - டெல்லி சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.;
மதுரை,
தென்மத்திய ரெயில்வே மண்டலத்தில் விஜயவாடா-கூடூர் ரெயில் பாதையில் உள்ள அப்பிகட்லா, நீடுபுரோலு மற்றும் சுந்துரு ரெயில் நிலையங்களில் 3-வது ரெயில் பாதைக்கான தண்டவாள இணைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை வழியாக ஹஜ்ரத் நிஜாமுதீன் வரை இயக்கப்படும் வாரம் இருமுறை சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.12651) வருகிற 23-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை சென்னை எழும்பூர், ரேணிகுன்டா, எர்ரகுன்டா, நந்தியால், குண்டூர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
அதேபோல, குண்டக்கல் கோட்டத்திற்கு உள்பட்ட ரேணிகுன்டா-கூட்டி ரெயில் பாதையில் உள்ள மாமண்டூரு-பாளப்பள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. இதற்காக, மதுரை-ஓகா வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.09519), வருகிற 26-ந் தேதி மட்டும் காட்பாடி, பாகலா, தர்மாவரம் மற்றும் கூட்டி வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் அன்றைய தினம் மட்டும் ரேணிகுன்டா, கடப்பா, எர்ரகுன்டா மற்றும் தடிபத்ரி நிறுத்தங்கள் வழியாக செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.