மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-05-06 21:21 GMT


மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகை ஆற்றில் கள்ளழகர்

வைச, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தீர்த்தவாரியும் நடந்தது. பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர் காட்சி தந்தார்.

நேற்று முன்தினம் இரவு வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நேற்று வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து ேசஷ வாகனத்தில் எழுந்தருளி வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

முனிவரின் சிலை அங்கு வைக்கப்பட்டிருந்தது. மண்டூக முனிவர் சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மாலையில், அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார். அங்கு நள்ளிரவு முதல் விடிய விடிய தசாவதார காட்சி தொடங்கியது. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட திருக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.

மோகினி அவதாரத்தில் உலா

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதி உலா வர உள்ளார். பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். நாளை மறுநாள் இருப்பிடம் அடைகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்