நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அளவிலான 7-வது மாநாடு மடத்துக்குளத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. தாலுகா தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநாட்டில் நல்லாறு-ஆனைமலையாறு அணைத்திட்டங்களை நிறைவேற்றி பி.ஏ.பி.திட்டத்தை முழுமைப்படுத்திட வேண்டும். அப்பர்-அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றி, அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்திட வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்றிட வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ 1-க்கு ரூ.140-ம், உரித்த தேங்காய் கிலோ1-க்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். வெங்காயம் சாகுபடி செய்து விலை வீழ்ச்சியால் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். நிலத்திற்கான இழப்பீட்டிற்கு அந்த கிராமத்தின் உயர்ந்தபட்ச வழிகாட்டி மதிப்பையும், சந்தை மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,எண்ணெய் குழாய் திட்டங்கள், எரிவாயு குழாய் திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும்.
பால் கொள்முதல் விலை
பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம் எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிலத்திற்கு நியாயமான விலையை தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக்கொண்டு நிலத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.