அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் பழுது

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் பழுது

Update: 2022-06-20 12:46 GMT

உடுமலை, 

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதால் கரும்பு அரவை பாதிக்கப்பட்டுவருகிறது.

கூட்டுறவு சர்க்கரை ஆலை

உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அரவைக்குத்தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்காரப்பட்டி, பழனி ஆகிய இடங்களில் உள்ள ஆலையின் கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யபட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி 2021-2022-ம் ஆண்டு கரும்பு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

எந்திரங்கள் அடிக்கடி பழுது

ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது. அதனால் ஆலை அரவை தொடங்கப்பட்டு நேற்று காலை6மணி வரை மொத்தம் 46 ஆயிரத்து 789 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டது. அதன்பிறகு நேற்று காலை 6மணி முதல்மதியம் 2 மணிவரையிலான முதல் சிப்டில் 438 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதையும் சேர்த்து மதியம் 2 மணி வரை 47ஆயிரத்து 227டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.

அப்போது ஆலையில் அரவைக்காக 785 டன் கரும்பு இருப்பு இருந்த நிலையில் ஆலையில் தொடர்ந்து கரும்பு அரவை நடைபெற்று வந்தது.கரும்பு 12 மாதங்களில் வெட்டி அரவை செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆலையில் எந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால், கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்