மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜை

திருவாரூரில் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2023-01-17 00:45 IST

திருவாரூரில் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பு பூஜை நடந்தது.

தமிழர்கள் மரபு

இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் தனித்தனியே பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபு. தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகை அன்று விவசாயம் செழிக்க உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவித்து வழிபாடு நடைபெறும்.

அதேபோல் வயல் காட்டிலும், களத்து மேட்டிலும் உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும், குடும்பத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பசுக்களுக்கும் நன்றி தெரிவித்து மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு

விவசாயம் எந்திரமயமாகி விட்டதாலும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதாலும் கால்நடைகளை வளர்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நேற்று கால்நடைகளுக்கான மாட்டு பொங்கலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, கயிறு மாற்றி, கொம்பு சீவி, வண்ணம் பூசி, நெட்டி உள்ளிட்ட மலர் மாலை அணிவித்து, சலங்கை பூட்டி அலங்கரித்தனர். பின்னர் மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

மேலும் மாட்டு கொட்டகை அருகே பந்தல் போட்டு கரும்புகள் கட்டி புதிய மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ, பொங்கல் என கோஷமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

சிறப்பு பூஜை

மாட்டு பொங்கலையொட்டி திருவாரூர் கந்த சாய்பாபா கோவிலில் உள்ள பசு மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்பு பொங்கல் படைத்து வழிபாடு நடந்தது.

இதில் கோவில் நிர்வாகி கனகசபாபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை தொடர்ந்து மாடுகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன. அப்போது பலர் தங்கள் வீட்டு வாசலில் உலக்கை போட்டு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள பசு மடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உழவர்களின் தோழனான கால்நடைகளுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்