தென்மண்டல செயல் இயக்குனராக எம்.முத்துகுமார் பொறுப்பேற்பு
தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனராக எம்.முத்துகுமார் பொறுப்பேற்று கொண்டார்.
குன்னூர்,
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் அடங்கிய இந்திய தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனரகம் குன்னூரில் உள்ளது. இதன் மூலம் தேயிலை விவசாயம் மேம்படவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மானிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனராக பணிபுரிந்த பாலாஜி, மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒடிசா மாநில போலான்ஜிர் மாவட்ட வேளாண்மை துறை விற்பனை வாரிய நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த எம்.முத்துகுமார் தேயிலை வாரிய செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் குன்னூர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். எம்.முத்துகுமார் மதுரை மாவட்டம் சக்கிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர். கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. படித்து உள்ளார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். கடந்த 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம்.முத்துகுமார் ஒடிசா மாநிலத்தில் 12 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்தார். குறிப்பாக குணாபூரில் சப்-கலெக்டராகவும், பழங்குடியின மேம்பாட்டு கழக திட்ட நிர்வாக அதிகாரியாகவும், போலான்ஜிர் மாவட்ட கலெக்டராகவும், பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.