ஓட்டப்பிடாரம் அருகே சவக்குழியில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயியால் பரபரப்பு
ஓட்டப்பிடாரம் அருகே சவக்குழியில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயியால் பரபரப்பு நிலவியது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே இறந்தவரை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட சவக்குழி தனக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதாக கூறி, சவக்குழியில் படுத்து விவசாயி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதியவரை அடக்கம் செய்ய ஏற்பாடு
ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு (வயது 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் பச்சை பெருமாள்புரம் கிராமம் அருகிலுள்ள சுடுகாட்டில் குழி தோண்டினர். அப்போது அங்கு செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவேல் மகன் மாரியப்பன் (45) என்பவர் வந்தார். அவர் சுடுகாடு அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
குழிக்குள் படுத்து போராட்டம்
இந்நிலையில் இறந்தவரை அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்ட நிலம் தன்னுடையது நிலம் எனக் கூறி தகராறு செய்தார். பின்னர் அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவரது கையில் கத்தியையும் வைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இறந்தவரின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அவரை குழியிலிருந்து வெளியே வருமாறு கூறியும் மறுத்துவிட்டார். சுமார் 2 மணி நேரமாக மாரியப்பன் குழிக்குள் படுத்து கொண்டு போராட்டம் நடத்தியதால், இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
போலீசார் கண்டிப்பு
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழிக்குள் இருந்த மாரியப்பனை வெளியே வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம நிர்வாக அதிகாரி மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, இறந்தவரை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழி உள்ள இடத்தை சர்வே செய்தனர். அது சுடுகாட்டுக்கு சொந்தமான நிலம் என தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் மாரியப்பனை கண்டித்து அங்கிருந்து வெளியேற்றினர்.
பரபரப்பு
இதை தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பின் இறந்தவரின் உடல் அந்தகுழியில் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.