திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

ஸ்ரீவைகுண்டத்தில் திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

Update: 2023-01-13 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் வழங்கி, பாதுகாப்பாக நடைபயணம் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள், குழந்தைகள் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பாதயாத்திரையாக செல்கின்றனர். முருகன் போட்டோவை மலர்களால் அலங்கரித்து வேன், கார், டிராக்டர், லாரி, பஸ் போன்ற வாகனங்களிலும் பக்தர்கள் ஊர்வலாக செல்கின்றனர்.

குறிப்பாக 2 அடி முதல் 15 அடி வரையிலான வேல் குத்தியும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சாலையின் ஓரத்தில் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்த மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்தவாறு ெசல்கின்றன.

ஒளிரும் ஸ்டிக்கர்

அதிகாலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் சாலை ஓரங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு வருவதால் விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எல்கையான செய்துங்கநல்லூரில் தொடங்கி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பழைய பாலம் அருகே பாதயாத்திரையாக ெசன்ற பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை போலீசார் வழங்கி பாதுகாப்பாக நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்த ஸ்டிக்கர்களை பக்தர்கள், தங்களது உடைமைகளில் ஒட்டி செல்வதால் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்