கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி
குறுமைய அளவிலான கைப்பந்து இறுதி போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி,
கேர்கம்பை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையே கோத்தகிரி குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 25-13, 25-22 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அந்த அணி தகுதி பெற்றது.