சேலம்
சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரித்து கிலோ ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிலோ ரூ.42-க்கு விற்பனை
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதாவது நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் மாநகரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, மேச்சேரி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக தக்காளி கொண்டு வரப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.48 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெகுவாக குறைந்தது
உழவர் சந்தைகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.30-க்கும், சின்னவெங்காயம் ரூ.60-க்கும், வெண்டைக்காய் ரூ.34-க்கும், கத்திரிக்காய் ரூ.48-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும், கேரட் ரூ.78-க்கும், அவரை ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், பச்சைமிளகாய் ரூ.70-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும் போது, உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒரு உழவர் சந்தைக்கு வழக்கமான நாட்களில் 5 டன்னுக்கு அதிகமாக விற்பனைக்காக தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது வரத்து அதில் இருந்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளது என்றனர்.