சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி

சாலையோரம் கொட்டப்பட்ட தக்காளி

Update: 2022-08-19 12:39 GMT

போடிப்பட்டி

உடுமலை பகுதியில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் ரோட்டோரங்களில் கொட்டிச் செல்லும் அவலநிலை தொடர்கிறது.

விலை வீழ்ச்சி

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சி என்பது தொடர்கதையாக உள்ளது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நீண்ட நாட்களாக கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. இதனால் பாடுபட்டு வியர்வை சிந்தி விளைய வைத்த தக்காளிப் பழங்களை ரோட்டோரங்களில் குவியல் குவியலாக கொட்டிச் செல்லும் அவலநிலை தொடர்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயம் என்பது உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் உன்னதமான தொழில் என்று அனைவராலும் போற்றப்படுகிறது.

எந்தவிதமான உற்பத்தி சார்ந்த தொழிலாக இருந்தாலும் முதலீடு, உற்பத்திச் செலவு, லாபம் என கணக்கிட்டு அதன் அடிப்படையில் உற்பத்தியாளர்கள் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

ஆனால் விவசாயத்தில் மட்டும் தான் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு வியாபாரிகளோ அல்லது இடைத்தரகர்களோ விலை நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது.

கேள்விக்குறியாகும் விவசாயம்

அந்த விலை உற்பத்திச் செலவுக்கு கட்டுப்படியாகிற விலையா, இந்த விலைக்கு விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை.

இதனால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன் பலரும் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுத் தொழில் தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போதைய நிலையில் சுமார் 14 கிலோ எடை கொண்ட முதல் தர தக்காளி பெட்டி ரூ. 80 வரையே விற்பனையாகிறது.

அதேநேரத்தில் 2-ம், 3-ம் தர தக்காளிகளை வாங்குவதற்கே ஆள் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவற்றை ரோட்டோரங்களில் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்படுகிறது.

ரோட்டோரங்களில் ஆங்காங்கே குவியல் குவியலாக கொட்டப்பட்டிருக்கும் தக்காளியைப் பார்க்கும் போது ஒவ்வொரு விவசாயிக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.அதேநேரத்தில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் தக்காளிகளை அதிக அளவில் தின்றால் அவற்றுக்கு செரிமானக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.எனவே கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியமாகும்.மேலும் காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதை அரசும் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்