காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை இறுக்கி கொலை

தா.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-22 19:02 GMT

தா.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் பிணம்

திருச்சி மாவட்டம் தேவரப்பம்பட்டி அருகே துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று காலை ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரமணிகண்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

கழுத்தை இறுக்கி கொலை

இறந்து கிடந்த பெண்ணின் வாய் மற்றும் கழுத்தில் அவர் அணிந்து இருந்த துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. வாய், கழுத்தில் லேசான காயம் இருந்தது. இதனால் அவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மேலும் உடல் அருகே சுடிதார், பெண்கள்அணியும் துணிகள், லிப்ஸ்டிக், சீப்பு, பவுடர், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை வைத்திருந்த லெதர் பை மற்றும் காலி மதுபாட்டில்கள், குளிர்பான பாட்டில்களும் கிடந்தன

அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்த பெண் தா.பேட்டையை அடுத்த ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மகள் பிரியங்கா (வயது 22) என தெரியவந்தது. பிரியங்கா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மலையப்ப நகரை சேர்ந்த சீனுபிரசாத் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். சீனுபிரசாத் ராயவேலூர் பகுதியில் கூலிவேலை செய்து வருவதும், பிரியங்கா தா.பேட்டையில் உள்ள ஜவுளிகடையில் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் லீலீ சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரியங்கா ஏன் வனப்பகுதிக்கு சென்றார்?, அவரை யாராவது ஏமாற்றி அழைத்து சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்