காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே கணவருக்கு 2-வது திருமணம் செய்துவைத்ததால் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-09-14 18:16 GMT

தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் நேற்று முன்தினம் காலை வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் நேற்று காலை அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்டீபனை கைது செய்துள்ளதாக கூறினர். இதனால் மறியலை விட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் ராஜேஸ்வரியின் உறவினர்கள் மீண்டும் அரக்கோணம் அரசு மருத்துவமனை முன் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரபு மற்றும் போலீசார் மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டனர்.

இந்த சாலை மறியலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்