காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்; பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

வடமதுரை அருகே காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண், பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

Update: 2022-11-09 17:59 GMT

வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் கோகுலவிஜயன் (வயது 24). டிப்ளமோ படித்துள்ள இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமாமாலினி (வயது 21). இவர், பி.எஸ்.சி முடித்துவிட்டு திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு காதல்ஜோடி வெளியேறினர். பின்னர் அவர்கள், திருச்சியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்