முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பொருட்கள் சூறை

பெரப்பேரியில் முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து பொருட்களை சூறையாடியதாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-07 17:40 GMT

ஆக்கிரமிப்பு அகற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பெரப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்கிற திலீபன் (வயது 55). திராவிட விடுதலை கழக மாவட்ட தலைவராக இருந்துவருகிறார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பெரப்பேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில் கடந்த 2-ந் தேதி பெரப்பேரி கிராமத்தில் ரவி என்பவரின் மனைவி ரேணுகா பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருந்ததாக நெமிலி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் வீட்டை இடித்து அப்புறபடுத்தினர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொருட்கள் சூறை

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு சந்திரன் மகன் கிரிதரன் (22), வேலு (43), ரவி (50), மணி மகன் முரளி (32), செல்வராஜ் மனைவி காஞ்சனா (36) உள்பட 40-க்கும் மேற்பட்டோர் திலீபன் வீட்டை தாக்கியதாகவும், வீட்டு கதவுகள், கண்ணாடி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திலீபன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியிடம்புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் பாணாவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கிரிதரன், வேலு, ரவி, முரளி (32), காஞ்சனா ஆகிய 5 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்