பூட்டி கிடக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்மருத்துவ உதவியை பெற முடியாமல் மக்கள் தவிப்பு

ஆரம்ப துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால் அவசர மருத்துவ உதவியை பெற முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-09-05 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் தகுந்த மருத்துவ உதவியை பெற வேண்டுமெனில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கோ அல்லது முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய நிலை இருந்தது.

மேலும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மேற்கண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் சில சமயங்களில் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுகிறது. அதுபோல் கர்ப்பிணி பெண்களையும் அனுமந்தையில் இருந்து விழுப்புரம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

பூட்டியே கிடக்கிறது

இவர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் அனுமந்தை கிராமத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிக்கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் அக்கிராம மக்கள், அங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு சென்று உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ உதவியை பெற்று பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுபோல் மருத்துவர்கள் சரிவர வராததால் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 2 நாள் மட்டுமே திறப்பதாகவும், பல சமயங்களில் பூட்டியே கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

சிரமப்படும் பொதுமக்கள்

இதன் காரணமாக அங்கு சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள், வெகுநேரம் காத்திருந்தும் மருத்துவர் வராமல் அவதிப்படுகின்றனர். தாங்கள் வசிக்கும் சொந்த கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் இருந்தும் பயனின்றி அவர்கள் வெகுதொலைவில் உள்ள விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மொத்தத்தில் அந்த ஆரம்ப துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி இருப்பதால் அது தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் அவலநிலையால் கிராம மக்கள், அவசர மருத்துவ உதவியை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இதில் உடனடியாக தலையிட்டு ஆரம்ப துணை சுகாதார நிலையம் தொடர்ந்து செயல்படவும், 24 மணி நேரமும் இங்கு பொதுமக்கள் மருத்துவ உதவியை பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்