பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மாணவன் சாவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த பெரிய கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் ஒன்று நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்தது. சருகனேந்தல் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது சாலையோர கண்மாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த வேம்பத்துரை சேர்ந்த ஹரிவேலன் என்ற மாணவன் பரிதாபமாக இறந்தான். மேலும் வேனில் பயணம் செய்த 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து இறந்த மாணவன் ஹரி வேலனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட வேன் வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதியை பெறாமல் இயக்கியது தெரியவந்தது.
திடீர் ஆய்வு
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின் பெயரில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் அதிகாரிகள் நேற்று பள்ளி வாகனங்களை திடீர் சோதனை செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெற்ற வாகனங்களை இயக்குகிறார்களா? அல்லது வேறு வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.
மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று பார்த்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது:-
இந்த ஆய்வில் பள்ளி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களை விட கூடுதல் மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்கள், நடத்துனர் இல்லாமல் இருந்த வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 6 வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
வேன் பறிமுதல்
நேற்று முன்தினம் பெரியகோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களை ஏற்றி வர பயன்படுத்திய வேன் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பித்து உரிய அனுமதி பெறப்படவில்லை.
அந்த பள்ளியின் பஸ் பழுதானதால் சென்னையில் இருந்து வாங்கி வந்திருந்த இந்த வேனை மாற்று வாகனமாக பயன்படுத்தியுள்ளனர். தற்போது அந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றார்.