உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
உள்ளாட்சி தினம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி குருபரஅள்ளி ஊராட்சியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஆ.காந்தி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சுமதி, சுகாதார கல்வி அலுவலர் கிருபா, வேளாண் துறை அருண், ஊராட்சி மன்ற துணை தலைவர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முகிலன் வரவேற்றார்.
கூட்டத்தில் ஊராட்சியில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரேஷன் கடை விற்பனையாளர் சுபேல் நன்றி கூறினார்.
மாங்கரை
மாங்கரை ஊராட்சி கிராம சபை கூட்டம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் மாதையன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். இதில் துணைத் தலைவர் மணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம் ஒன்றியம்
காரிமங்கலம் யூனியனில் 30 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. அடிலம், காளப்பனஅள்ளி, பைசுஅள்ளி, மல்லிகுட்டை, பெரியாம்பட்டி, பேகாரஅள்ளி, பொம்மஅள்ளி, கும்பாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடந்த கூட்டத்திற்கு அதன் தலைவர்கள் தீபாஅன்பழகன், நந்தினிபிரியா செந்தில்குமார், மகேந்திரன், பச்சையம்மாள் சிவராஜ், ஜெயலட்சுமிசங்கர், நந்தினிஈஸ்வரன், தீர்த்தகிரி, கவுரி திருக்குமரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏ.ஜெட்டிஅள்ளி
ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி காமராஜ் நகர் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள் அரிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளர்களாக வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம், ஊராட்சி ஒன்றிய உதவியாளர் ரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கம், அரசின் திட்டங்களை விரிவாக எடுத்துக் கூறி பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டது. ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 25 தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் ஊராட்சி செயலாளர் சித்தேஸ்வரன், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் பொன்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவாடி- எர்ரபையன அள்ளி
சிவாடி ஊராட்சி கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நோக்கம், அரசின் திட்டங்கள் பற்றியும், அதனை பெறும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக பேசினர். ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் ஊராட்சி செயலாளர் சித்ரா, ஒன்றிய கவுன்சிலர் பழனியம்மாள் பச்சிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எர்ரபையனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி தொடக்க துவக்க பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர். ஊராட்சி துணை தலைவர் ரஞ்சித்குமார், ஒன்றிய கவுன்சிலர் கணேசன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.