ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருந்த 7 கவுன்சிலர் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது- வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தற்செயல் தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2 பேரூராட்சி வார்டுகள் உள்பட 16 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிகளில் போட்டியிட மொத்தம் 42 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 39 பேரில் சிலர் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். எனவே 9 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
எனவே அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்கம்பேட்டை ஊராட்சி 2-வது வார்டு, பவானி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியபுலியூர் ஊராட்சி 3-வது வார்டு, பவானிசாகர் ஒன்றியத்துக்கு உள்பட்ட தொப்பம்பாளையம் ஊராட்சி 1-வது வார்டு, கோபி ஒன்றியம் கோட்டுப்புள்ளாம்பாளையம் 1-வது வார்டு, மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சி 1-வது வார்டு என 5 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு, அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு என 2 பேரூராட்சி வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 7 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
பாதுகாப்பு
தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் அதிகாரிகள் வாக்குச்சாவடிகள் அமைத்தனர்.. 46 புதூர் ஊராட்சி 1-வது வார்டுக்கு மட்டும் ஆண்கள் வாக்குச்சாவடி, பெண்கள் வாக்குச்சாவடி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மற்ற அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வாக்குச்சாவடி மைய அதிகாரிகள், போலீசார் பணிக்கு வந்தனர். நேற்று அதிகாலையில் பேரூராட்சிகளில் அமைந்த வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதுபோல் கிராம ஊராட்சிகளில் வாக்கு சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
விறு விறு வாக்குப்பதிவு
ஈரோடு அருகே உள்ள 46 புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மூலப்பாளையம் ஜேசீஸ் பள்ளிக்கூடத்தில் நடந்தது. அங்கு ஆண்-பெண் வாக்குச்சாவடிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தன. காலையில் இருந்தே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக வந்தனர். இங்கு மொத்தம் 1,404 வாக்காளர்கள் இருந்தனர். ஒரு பதவிக்கு 4 பேர் போட்டியில் இருந்தனர். மாலை 6 மணிவரை தேர்தல் நடந்தது. இங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல் சிங்கம்பேட்டை ஊராட்சி 2-வது வார்டுக்கு 2 பேரும், பெரியபுலியூர் ஊராட்சி 3-வது வார்டுக்கு 4 பேரும், தொப்பம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டுக்கு 2 பேரும், கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சி 1-வது வார்டுக்கு 2 பேரும் போட்டியில் இருந்தனர். அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டுக்கு 3 பேரும், அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கு 3 பேரும் போட்டியிட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறு என நடந்தது.
வாக்கு பெட்டிகள்
அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை ஊராட்சியில் 377 வாக்காளர்களும், பவானி அருகே பெரியபுலியூர் ஊராட்சியில் 345 வாக்காளர்களும், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சியில் 469 வாக்காளர்களும், கோபி அருகே கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சியில் 449 வாக்காளர்களும், மொடக்குறிச்சி அருகே 46 புதூர் ஊராட்சியில் 637 வாக்காளர்களும் ஓட்டு போட்டனர். இதேபோல் அத்தாணி பேரூராட்சியில் 318 வாக்காளர்களும், அம்மாபேட்டை பேரூராட்சியில் 649 வாக்காளர்களும் ஓட்டு போட்டனர்.
தேர்தல் நடந்த பகுதியில் உள்ள மொத்தம் 4 ஆயிரத்து 662 வாக்காளர்களில் 3 ஆயிரத்து 244 பேர் வாக்களித்து உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் நடந்த தற்செயல் தேர்தலில் 69.58 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர். 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன.