எவ்வித பாரபட்சமும் பாராமல் தகுதியானவர்களுக்கு கடன் உதவி

எவ்வித பாரபட்சமும் பாராமல் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.

Update: 2023-02-24 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வங்கிகள் மூலம் சிறு, குறு தொழில்புரிவதற்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவிகளை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.

அறிவுரை

அதனடிப்படையில் நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ கடன், நபார்டு வங்கி, கல்விக்கடன், நகைக்கடன், பயிர்க்கடன், வேளாண் எந்திரங்கள் கடன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கான கடன் போன்ற திட்டங்களின் மூலம் வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது. நடப்பாண்டில் நிலுவையில் உள்ள கடனுதவிகளை மார்ச் மாத இறுதிக்குள் பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். மேலும் கடனுதவிகள் வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் பாராமல் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடனுதவி

தொடர்ந்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கிடும் விதமாக விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசூர் ஊராட்சியில் வசித்து வரும் தனலட்சுமிக்கு ரூ.2,05,270 மதிப்பில் எலக்ட்ரிக்கல் கடை வைப்பதற்கான கடனுதவியும், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெளி ஊராட்சியில் வசித்து வரும் மேரி கிறிஸ்டிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பிரவுசிங், டிடிபி சென்டர் வைப்பதற்கான கடனுதவியும், காணை ஊராட்சியில் வசித்து வரும் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மளிகை கடை வைப்பதற்கான கடனுதவி என மொத்தம் 3 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவியை கலெக்டர் சி.பழனி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (ஆர்பிஐ) சொர்ணாம்பாள் சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மண்டல மேலாளர் (இந்தியன் வங்கி) குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹர சுதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்