2,689 பேருக்கு ரூ.12 கோடியில் கடன் உதவிகள்
அருப்புக்கோட்டையில் 2,689 பேருக்கு ரூ.12 கோடியில் கடன் உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் 2,689 பேருக்கு ரூ.12 கோடியில் கடன் உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள்.
கூட்டுறவு வார விழா
அருப்புக்கோட்டையில் விருதுநகர் மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். மண்டல துணை பதிவாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் முன்னதாக கூட்டுறவு வார விழா உறுதிமொழி எடுக்கப்பட்டது.
2,689 பேருக்கு கடனுதவிகள்
அதனைத்தொடர்ந்து சிறு வணிக கடன், சுய உதவிக்குழு கடன், முத்ரா கடன், வீட்டு அடமான கடன், மகளிர் வியாபார கடன் என 2 ஆயிரத்து 689 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான கடன் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
முன்னதாக மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
தொழில் வளர்ச்சி
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும் போது, கிராமப்புறம் மற்றும் நகர்புற மக்களை ஒருங்கிணைத்து கட்டமைப்புகளை உயர்த்த கூடிய துறையாக கூட்டுறவு துறை உள்ளது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேளாண் வளர்ச்சியும் முக்கியம். வேளாண் துறையின் வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குவது கூட்டுறவு துறை. வேளாண் மக்களின் தோளோடு தோளாக நிற்கும் துறையாக கூட்டுறவு துறை உள்ளது. கூட்டுறவு துறையால் எண்ணற்ற தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசும் போது,
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவராலும் இணைந்து கூட்டுறவு துறை ெதாடங்கப்பட்டது. மத்திய அரசு வங்கியில் நிறைய சிரமங்கள் உள்ளன. ஆனால் கூட்டுறவு என்பது நம்முடைய வங்கி என்ற உணர்வு அனைவருக்கும் இருக்கும். வங்கி உயிரோட்டமாக இருக்க வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த வேண்டும். கூட்டுறவு வங்கி நம்முடைய வங்கி என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டுறவு விழாவில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், ஒன்றிய குழு தலைவர் சசிகலா, செட்டிகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அருப்புக்கோட்டை சரக கூட்டுறவு பதிவாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.