வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஏரிகளில் வசிக்கின்றன: ஊருக்குள் நுழையும் முதலைகளால் கிராம மக்கள் அச்சம் - அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே நெடுங்குன்றம் ஏரி, சதானந்தபுரம் ஏரி மற்றும் கொளப்பாக்கம் ஏரிகளில் வசிக்கும் முதலைகள் ஊருக்குள் புகுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நெடுங்குன்றம் ஏரி, சதானந்தபுரம் ஏரி மற்றும் கொளப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த 3 ஏரிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்ந்து வருகிறது. இந்த ஏரியை சுற்றி 3 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுங்குன்றம், சதானந்தபுரம், கொளப்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 15 வருடங்களாக அடிக்கடி இரவு நேரங்களில் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை உள்ள முதலைகள் ஊருக்குள் ஊர்ந்து வருகிறது.
அப்படி வரும் முதலைகளை கிராம மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருவது தொடர் கதையாகிவிட்டது. இதனால் ஏரியை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் கொளப்பாக்கம் வரபிரசாத் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 5 அடி முதலையும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுங்குன்றம் மலையடிவரத்தில் சுமார் 7 அடி முதலை ஊருக்கு வந்தது. இதனை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனால் இந்த ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏரியில் குளிக்கவும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். ஒரு சில சமயங்களில் ஏரியை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது ஏரியில் வாழ்ந்து வரும் முதலைகள் ஆடு, மாடுகளை கடித்து குதறி விடுகிறது. இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏரியில் மீன் பிடிக்கும் போது மீன் வலைகளில் முதலை குட்டிகள் சிக்கி வருகிறது. எனவே 3 கிராம மக்களை அச்சுறுத்தி ஏரியில் வாழ்ந்து வரும் முதலைகளை வனத்துறையினர் முழுமையாக பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சதானந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மேரி கூறியதாவது:-
சதானந்தபுரம் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் ஏரிக்கரை பகுதியில் முதலைகள் வந்துவிட்டு மீண்டும் ஏரிக்குள் சென்று விடுகிறது. இதனால் எந்த நேரத்தில் ஊருக்குள் முதலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் வசித்து வருகிறோம், முதலை ஊருக்குள் வரும்போது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக அவர்கள் வந்து பிடிப்பதில்லை அதற்கு பதில் அந்த முதலையை பொதுமக்களே கயிறு போட்டு கட்டி பிடித்து வைத்தவுடன் வனத்துறையினர் வந்து மீட்டு செல்கின்றனர். எங்களுக்கு முதலைகளிடம் இருந்து எப்போது விடிவு காலம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
முத்தாலம்மாள் என்ற பெண் கூறியதாவது:-
வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள நெடுங்குன்றம், சதானந்தபுரம் ஏரிகளுக்கு முதல் முதலில் முதலை குட்டிகள் எப்படி வந்தது என்றால், வண்டலூரில் பூங்காவில் முதலைகள் குட்டி போடும்போது அந்த முதலைகளை பறவைகள் இரைக்காக தூக்கி வரும் போது இந்த ஏரிகளில் தவறி விழுந்து விடும். அப்படி விழுந்த முதலைகள் ஏரியில் உள்ள மீன்களை சாப்பிட்டு முதலைகளை இனப்பெருக்கம் செய்த காரணத்தினால் நெடுங்குன்றம், சதானந்தபுரம் ஏரியில் ஏராளமான முதலைகள் வாழ்ந்து வருகிறது.
தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலைகள் இருப்பிடத்தில் மேல் பகுதியில் வலை அமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து முதலைகள் பறவைகள் தூக்கி செல்வது கிடையாது. அடிக்கடி ஏரி பகுதியிலிருந்து ஊருக்குள் முதலைகள் வருகிறது. எனவே வனத்துறையினர் ஏரிகளில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,
எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த ஏழுமலை என்கிற பகவதி என்பவர் கூறுகையில்:-
இந்த ஏரியில் உள்ள முதலைகளை பிடிப்பதற்காக கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வனத்துறை அதிகாரிகள், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆகியோரிடம் ஏற்கனவே பலமுறை மனுக்கள் தரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரியில் சுற்றித்திரியும் முதலைகளை பிடிப்பதற்கு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கொளப்பாக்கம் நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆகிய ஏரியில் இருக்கும் முதலைகளை முழுமையாக பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நிலம் சம்பந்தப்பட்ட 3 ஏரிகளையும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் கள ஆய்வு செய்து நேரில் ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.