களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு 'குப்பையில்லா குமரி' விழிப்புணர்வு நடைபயணம் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
குப்பையில்லா குமரி திட்டத்தை வலியுறுத்தி களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடந்த விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
களியக்காவிளை:
குப்பையில்லா குமரி திட்டத்தை வலியுறுத்தி களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை நடந்த விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு நடை பயணம்
குமரி மாவட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக குப்பை இல்லா குமரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான விழிப்புணர்வு நடை பயணம் (வாக்கத்தான்) தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை சுமார் 8 கி.மீ. தூரம் நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குப்பையில்லா குமரி திட்டம்
குமரி மாவட்டத்தை குப்பை இல்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் வரை சுமார் 8 கி.மீ. தூரம் மாபெரும் நடை பயணத்தை தொடங்கி வைத்து, பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வியாபார சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று உள்ளனர். இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பையில்லா குமரியாக மாற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நடைபெற உள்ளது.
குப்பையில்லா குமரி என்ற திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். எனவே மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொது மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
6 மாதம்
குமரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது 95 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதை 100 சதவீதமாக மாற்றுவதற்கான முயற்சி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேலும் சுமார் 50 சதவீத வீடுகளில் கழிவு நீரை வெளியில் விடவில்லை. 6 மாதத்திற்குள் குப்பையில்லா குமரியாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நமது மாவட்டம் குப்பையில்லா மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும், நெகிழி இல்லா மாவட்டமாகவும் மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு பதிலாக மஞ்சப்பையினை வழங்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் குப்பை இல்லா குமரியை வலியுறுத்தி வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர்.