இளம் பெண்ணை கிண்டல் செய்ததில் சாராய வியாபாரிகள் மோதல்

பேரணாம்பட்டு அருகே இளம்பெண்ணை கிண்டல் செய்ததில் சாராயா வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Update: 2022-12-28 17:07 GMT

சாராய வியாபாரிகள் மோதல்

பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைச் சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிஞ்சி என்கிற சரண்ராஜ் (வயது 33), பிரபல சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை சஞ்ஜீவி (25) அதேப் பகுதியில் குடிநீர்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சாராய வியாபாரி ராமகிருஷ்ணன் (23) என்பவர் சஞ்ஜீவியை கேலி, கிண்டல் செய்து கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த சரண்ராஜ், அவரது தாயார் கற்பகம் ஆகியோர் சென்று ராமகிருஷ்ணனை தட்டிக் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் செங்கல் மற்றும் கையால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பிஞ்சி என்கிற சரண்ராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ஜன்னல் கண்ணாடி உடைப்பு

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பிஞ்சி என்கிற சரண்ராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அங்கு மீண்டும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன், அல்லிமுத்து, மணி, சிதம்பரம், லோகேஷ், அமுதா, சுஜி ஆகிய 8 பேர் மீதும், ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சரண்ராஜ், சோனியா, பாஷா, மணி பிரதாப், முரசொலி மாறன் மற்றும் சிலர் மீதும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி மற்றும் போலீசார் தனிதனியாக வழக்குப் பதிவு செய்து, 14 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்