கோவில்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும்

கோவில்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும்

Update: 2023-06-13 18:45 GMT

கோவை, ஜூன்

கோவில்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கோவில் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

மது விற்பனை

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவில் பூசாரிகள், நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை கமினர்கள் சண்முகம் (தெற்கு), சந்தீஸ் (வடக்கு), மதிவாணன் (போக்குவரத்து) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களின் பூசாரிகள், நிர்வாகிகள், அறங்காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கோவில்களுக்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகிறது. அரசு விதிமுறையை மீறி அதிகாலையில் மது விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பக்தர்களிடம் தகராறு

சில கோவில்களுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கஞ்சா போதையில் உள்ள நபர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே கோவில்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். மேலும் கோவில்களுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் சிலர் வாகனங்களை நிறுத்தி வைத்து கொள்கின்றனர்.இதன்காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.

நடவடிக்கை

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பட்டா நிலங்களில் உள்ள கோவில்கள் கூட இடிக்கப்படுகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் முதல் முறையாக கோவில் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதற்காக போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கோவில் மற்றும் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து உடனடியாக தெரிவிக்கலாம். சடத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்