டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க மதுப்பிரியர்கள் கோரிக்கை

இலுப்பூர் அருகே மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க மதுப் பிரியர்கள் கோரிக்கை விடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

Update: 2023-09-25 18:05 GMT

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக இலுப்பூர் அருகே ஈஸ்வரன்கோவில் ஊராட்சியை சேர்ந்த மதுப்பிரியர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் மனு தொடர்பாக கூறியதாவது:-

எங்கள் பகுதியில் வள்ளுவர்நகர் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. சமீபத்தில் அந்த கடையில் பணம் கொள்ளைப்போனது. மேலும் அங்கு டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். இதனால் டாஸ்மாக் நிர்வாகத்தினர் கடந்த 23-ந் தேதி கடையை மூடிவிட்டனர்.

வாகன விபத்து

இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் நாங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் இலுப்பூர் அல்லது விராலிமலை சென்று மதுக்குடிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு மதுக்குடிக்க அல்லது குடித்து விட்டு இரு சக்கர வாகனங்களில் வரும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே மூடிய டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும். தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

பூங்காவை சீரமைக்க கோரிக்கை

இதேபோல இந்திய விடுதலை போராட்ட தியாகிகள் குடும்ப நல பேரமைப்பின் தலைவர் தனபதி உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், "அண்டக்குளம் ஊராட்சியில் தெம்மண்டாப்பட்டி கிராமத்தில் கடந்த 1957-ம் ஆண்டு காந்தி பூங்கா திறந்து வைக்கப்பட்டது. அந்த பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் காந்தி சிலை கடந்த 1965-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாக மரங்கள் முறிந்து சேதமடைந்தன. தண்ணீர் தொட்டியும், காந்தி சிலையும் சேதமடைந்து விட்டது. இதனை சீரமைக்க கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே கஜா புயலால் சேதமடைந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தனர்.

மழையூர் அரசு பள்ளி

இதேபோல மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெறவும், தற்போது உள்ள தலைமை ஆசிரியா் மற்றும் விளையாட்டு ஆசிரியர், இரவு நேர காவலாளி ஆகியோரை பணியிட மாற்றம் செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 579 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் ரூ.2¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்