"பொன்னியின் செல்வன் கதையில் உள்ளதை போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை" நீதிபதி கவலை

பொன்னியின்செல்வன் கதையில் உள்ளதைப் போன்று தற்போதைய காவிரி ஆறு இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கவலை தெரிவித்தார்.

Update: 2023-10-06 20:15 GMT

இழப்பீடு கோரி வழக்கு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் மார்கழி திருவிழா நடந்தது. அந்த சமயத்தில் என் மகன் பிரபாகரன் மற்றும் 2 மாணவர்கள் என 3 பேர் அரவக்குறிச்சி ஆவுடையார் பாலம் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து வர சென்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் அமைக்கப்படுவதாலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே உயிரிழந்த மாணவர்களுக்கு இழப்பீடு கோரி கடந்த 2020-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் எங்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்கும்படி அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

பிள்ளைகளை இழந்து வாடும் எங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் கதையில் வர்ணிக்கப்படுவதைப்போல காவிரி ஆற்றின் நிலை தற்போது இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை. மணலும் இல்லை. கடந்த வருடம் ஆற்றில் தண்ணீர் ஓடியது" என கவலை தெரிவித்தார்.

4 மாதத்தில் இழப்பீடு

விசாரணை முடிவில், கோவில் திருவிழாவையொட்டி புனித நீராடிய சமயத்தில் மனுதாரர் மகன் உள்பட 3 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஏற்கனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில் தலா ரூ.25 லட்சத்தை இழப்பீடாக 4 மாதத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்