பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்:
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கல்லால் அடித்துக்கொலை
கன்னியாகுமரி சிலுவை நகர் 2-வது அன்பியத்தை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). இவருக்கும், கன்னியாகுமரி புதுகிராமம் 3-வது அன்பியம் பகுதியை சேர்ந்த ரீத்தம்மாள் மகள் அருள் சுனிதாவுக்கும் (39) கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மரிய டெல்லஸ் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் கடந்த 21-9-2019 அன்றும் மனைவியுடன் தகராறு செய்தார்.
அப்போது மரிய டெல்லஸ் குடிபோதையில் சுனிதாவை அடித்தார். இதனால் வலி தாங்க முடியாத சுனிதா வீட்டைவிட்டு வெளியே ஓடினார். அப்படியும் விடாமல் மரியடெல்லஸ் அவருடைய நைட்டியைப் பிடித்து இழுத்து வீட்டின் அருகில் உள்ள சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தள்ளி, தலையில் கல்லால் அடித்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து ரீத்தம்மாள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் மரிய டெல்லசை கைது செய்து பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மனைவியை கொலை செய்த மரிய டெல்லசுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜரான மரிய டெல்லசை, போலீசார் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.