ஆட்டோ டிரைவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ டிரைவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-10-13 17:49 GMT

ஆட்டோ டிரைவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

ஆட்டோ டிரைவர் கொலை

வேலூர் கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தர் பாரத் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சேண்பாக்கம், பர்மா காலனி, மசூதிதெருவை சேர்ந்த மைக்கேல் என்ற உமாமகேஸ்வரன் (32). மேளம் அடிக்கும் தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் பாரத் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று பாரத் மனைவியிடம், மைக்கேல் கூறினார். இதனால் பாரத் வீட்டில் சண்டை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து 15.1.2020 அன்று பாரத் தனது மகன் சஞ்சயுடன் மைக்கேல் வீட்டுக்கு சென்று இதுகுறித்து, ஏன்? என் மீது அவதூறாக எனது மனைவியிடம் கூறினாய் என்று மைக்கேலிடம் கேட்டுள்ளார். அப்போது, மைக்கேல் நான் அப்படித்தான் கூறுவேன் என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மைக்கேல் இரும்பு கம்பியால், சஞ்சய் கண்முன்னே பாரத்தின் தலையில் அடித்துள்ளார்.

இதனால் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் சிவபிரகாஷம் ஆஜராகி வாதாடினார். நேற்று இறுதி விசாரணை நடந்தது.

வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கொலை செய்த மைக்கேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்