சொத்து தகராறில் அண்ணன் குடும்பத்தை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அண்ணன் குடும்பத்தை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-10-31 19:35 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் அண்ணன் குடும்பத்தை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சொத்து பிரச்சினை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது40). இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு ராஜபாளையத்தில் குடியிருந்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரர்கள் முருகன் (39), பழனிச்சாமி (37), சகோதரி காந்தி (30) ஆகிய 3 பேருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 3-11-2006 அன்று கணேசன் மனைவி கலா சமையல் செய்து முடித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டிற்குள் புகுந்த இவர்கள் சாதத்தில் மயக்க மருந்து கலந்ததாக கூறப்படுகிறது.

4 பேர் சாவு

கோவிலுக்கு சென்று விட்டு வந்த கணேசன், கலா, அவரது குழந்தைகள் சாந்தி பிரியா, கிருஷ்ணவேணி ஆகிய 4 பேரும் அந்த உணவை சாப்பிட்டவுடன் மயங்கி விட்டனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் கணேசனின் வீட்டிற்குள் புகுந்து கணேசன் உள்பட 4 பேரையும் கத்தியால் கழுத்தில் குத்தினர். இதில் 4 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கொலை செய்த முருகன், பழனிச்சாமி, காந்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து அண்ணனையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்த 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.89 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்