விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தினர் 3 பேருக்கு ஆயுள்தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவருடைய அண்ணன் குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-11-01 20:30 GMT

மேட்டூர்,

விவசாயி கொலை

மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 58), விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் அய்யன்துரைக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் அய்யன்துரை, அவருடைய மனைவி குப்பாயி (65), மகன் அப்புசாமி (48), மருமகள் செல்வி (43) ஆகிய 4 பேரும் சேர்ந்து மணியிடம் தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரமடைந்த அய்யன்துரை தனது தம்பி மணியை சூரி கத்தியால் குத்தினார். அப்புசாமி மணியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யன்துரை குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அய்யன்துரை உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்புசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், குப்பாயி, செல்வி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி குமார சரவணன் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசுதரப்பில் வக்கீல் குழந்தைவேலு ஆஜராகினார்.

Tags:    

மேலும் செய்திகள்