தியானம் செய்ய ஒரு நாள் விடுமுறை கோரி புதுக்கோட்டை மின்வாரிய அதிகாரி கடிதம்
மன உளைச்சலால் அவதி அடைந்த புதுக்கோட்டை மின்வாரிய அதிகாரி தியானம் செய்ய ஒரு நாள் விடுமுறை கோரி கடிதம் எழுதினார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
பொதுவாக அரசு துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் விடுப்பு தேவை என்றால் குறிப்பிட்ட காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதுபோல் விடுப்புக்கான காரணத்தை பொறுத்தே விடுமுறைக்கு அனுமதி அளிப்பது உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டையில் மின்வாரியத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர் தனக்கு ஒரு நாள் விடுப்பு கோரி உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதம் வினோதமாக இருந்தது. அதாவது அதில் விடுப்புக்கான காரணத்தை அவர் கூறியிருந்ததில், ''கடந்த சில வாரங்களாக பணியாளர்கள், வாரியத்தினாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதியை வேண்டி எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்ய உள்ளதால் எனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு'' தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை நேற்று முன்தினம் அளித்து, நேற்று விடுமுறை கோரியிருந்தார். இந்த கடிதத்தை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபோன்ற காரணங்களுக்கு விடுப்பு தர முடியாது என அதனை நிராகரித்தனர். மின்சார வாரிய அதிகாரியின் இந்த வினோத விடுப்பு கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.