மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-01-30 10:45 GMT

சென்னை,

மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க நாளாக கடைபிடித்து மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ.வேலு மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள், கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டோம்.

காந்தியடிகளை சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்தை காக்கும் கவசமாக இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம். மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்