'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்

வலைத்தள வலைகளில் விழாமல் இருந்தால், ‘சைபர்’ குற்றங்களை ‘சைபர்’ ஆக்கலாம்.

Update: 2022-11-30 16:15 GMT

'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டா குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.

பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.

இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

தொழில்நுட்ப வழிப்பறி

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான்.

இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

நொடிப்பொழுதில் பணம் இழப்பு

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜ்ஜியம்) ஆக்கமுடியும்.

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நடவடிக்கை

கணினி மைய உரிமையாளர் சரவணக்குமார் (கோபால்பட்டி):- எய்ம்ஸ் நிர்வாகத்தின் கணினிகளை முடக்கி ரூ.200 கோடி கேட்கும் அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரித்து விட்டன. எனது நண்பரின் கணினியை ஹேக் செய்து பணம் கேட்டு ஹேக்கர்கள் மிரட்டினர். கணினியில் இருந்த பல புகைப்படங்களை எடுக்க முடியாமல் போனது. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கணினி, மடிக்கணினி, செல்போன் அனைத்துக்கும் இணையதள இணைப்புகள் வருகின்றன. அதை கிளிக் செய்தாலே நமது தகவல்களை கைப்பற்றி மிரட்டுகின்றனர். சைபர் குற்றங்களை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி ஊழியர்களை போல...

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் உமா மகேஸ்வரன் (குஜிலியம்பாறை):- ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. வங்கி அதிகாரிகள் போன்று செல்போனில் பேசி ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய எண்களை வாங்கி பணத்தை எடுத்து விடுகின்றனர். வங்கி அதிகாரிகள் செல்போனில் பேசி ஏ.டி.எம். கார்டு எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பதில்லை. அதேபோல் விலை உயர்ந்த பொருட்கள் பரிசு விழுந்ததாக கூறி முன்பணம் பெற்று மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் மோசடியை தவிர்க்கலாம்.

ஆபாசமாக சித்தரிப்பு

புகைப்பட கலைஞர் ராமுத்தாய் (அஞ்சுகுழிபட்டி) :- அவசர தேவைக்காக கடன் செயலிகளில் கடன் பெற்றால், பல மடங்கு தொகை செலுத்தும்படி கூறி மிரட்டுகின்றனர். முகநூல், இன்ஸ்டாகிராமில் இருந்து பெண்களின் படத்தை எடுத்து மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் கேட்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதை வெளியே சொல்ல முடியாமல் பணத்தை இழக்கின்றனர். பெண்கள் இணையதளத்தில் அதிக நேரம் பொழுதுபோக்குவதை தவிர்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விஷயத்துக்காக மட்டுமே இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். எல்லாமே இணையதளம் என்றாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். எனவே உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்