பசுமாட்டை கொன்ற சிறுத்தைகள்

குடியாத்தம் அருகே பசுமாட்டை, சிறுத்தைகள் கடித்து கொன்றன.

Update: 2023-01-29 15:20 GMT

சிறுத்தைகள் நடமாட்டம்

குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது. குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

குடியாத்தம் வனப்பகுதியில் 6 ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறுத்தைகள் சைனகுண்டா, கொட்டமிட்டா பகுதிகளில் ஆடுகள் மற்றும் மாடுகளை சிறுத்தைகள் கொன்றுள்ளன

பசுமாட்டை கொன்றன

குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது. இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி மூர்த்தி தனது கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் தட்சிணாமூர்த்தியின் நாய் தொடர்ந்து குறைத்தபடி இருந்ததால் மாடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்று டார்ச் லைட் அடித்து பார்த்தபோது சிறுத்தைகள் ஒரு பசு மாட்டை கடித்து குதறிக் கொண்டு இருந்ததன. லைட் வெளிச்சத்தை கண்டதும் சிறுத்தைகள் தப்பி ஓடி உள்ளன.

இதனால் பயந்துபோன தட்சிணாமூர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்து இது குறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தெரிவித்து அனைவரும் சென்று பார்த்த போது அந்த பசு மாடு இறந்து கிடந்தது. சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவர் கார்த்தி பசுமாட்டை பரிசோதனை செய்தார்.

உப்பிரப்பள்ளி கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேளைகளிலேயே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்