வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை சாவு

வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை சாவு

Update: 2022-11-24 18:45 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா-தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார், கீழ் குந்தா அரசு உதவி கால்நடை மருத்துவர் மோகன் குமார் ஆகியோர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் உடல் வனப்பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனசரகர் சீனிவாசன் கூறுகையில், சிறுத்தை சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதியுள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிகளவில் ரத்தம் வெளியேறி இறந்துள்ளது. அந்த வாகனத்தை ஓட்டி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்